உன்னைப் பார்த்த
முதல் நொடியில்;
உன் கைப்பிடித்த
முதல் கணத்தில்;
காதலில் நான்
விழுந்தேன்!
உன் மேல்
காதலில் நான் விழுந்தேன்!!
இன்று என்
முன்னே வந்த நீ,
இத்தனை நாள்
என்னுளே இருந்ததை உணர்வாயோ?
உனக்காக எதையும்
நான் செய்வேன்;
உன்னை என்றும்
நான் நீங்க மாட்டேன்;
என்று நான்
உறுதி ஏற்றதை அறிவாயோ?
எதோ சொல்ல
விழைகிறாய்,
அதைப் புரியாமல்
தவிக்கிறேன்!
இன்னும் கொஞ்ச
நாள் பொறு கண்ணா,
உன் மௌனத்தையும்
மொழிப்பெயர்க்கும் வித்தையைக் கற்கிறேன்!!
இது வரைக்கும்
என் அன்பு என்னவருக்கு மட்டுமே இருந்தது,
அதை பங்கு கொள்ள
வந்து விட்டாய் நீ இன்று!
என் கணவராலும்
புரிந்து கொள்ள முடியாது,
நம் அன்பு
எவ்வளவு ஆழம் என்று!!
காதல் ஒரு முறை
தான் தோன்றுமாம்,
ஆனால் எனக்கோ
உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது!
திருமணத்திற்குப்
பிறகு வந்த இந்த முதல் காதல்,
என் மரணத்திற்குப்
பிறகும் நீடிக்கும்!!
சுமையை சுகம்
ஆக்கியவன் நீ!
வலியை
இனிதாக்கியவன் நீ!
என் குருதியை
உணவாக்கியவன் நீ!
என் வாழ்வை
புதிதாக்கியவன் நீ!
என்றென்றும் என்
செல்லம் நீ!
என்றாள்,
தன் புதிதாய்
பிறந்த குழந்தையைக் கையில் ஏந்தி!!!
No comments:
Post a Comment